மேடைத் தென்றல்
வேதம் புதுமை செய் - 3
(01-02-2026 அன்று சிவகாசி அனுப்பங் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராம்ஜி பாலிபேக்ஸ் வளாகத்தில் நடைபெற்ற ஹிந்து ஒற்றுமைத் திருவிழாவில் குருகுலத் தென்றல் ஆசிரியர் டாக்டர் V.K.S.சிவசக்தி பாலன் அவர்கள் வழங்கிய தலைமையுரை)
சந்திரனை பாம்பு விழுங்குவதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது - சூரியனைப் பாம்பு விழுங்குவதால் சூரிய கிரகணம் ஏற்படுகின்றது என்று ஹிந்து வேதங்கள் கூறுவது உண்மையே.
உங்கள் நிழல் என் மீது விழுந்தாலோ - என் நிழல் உங்கள் மீது விழுந்தாலோ நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் பூமியின் நிழலும்-நிலவின் நிழலும் கிரகணங்களின் போது பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
எத்தனையோ பேர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டதாயும் - எத்தனையோ பெண்களின் கர்ப்பங்கள் பாதிக்கப்பட்டதாயும் விஞ்ஞானம் நிறுபித்து வருகின்றது.
அது ஏன்?
அதற்கான பதிலினை நமது அரசியல் கோமாளிகளினால் கூறமுடியுமா? அதற்குரிய பதில் ஹிந்து மதத்தில் மட்டும் தான் இருக்கின்றது.
முதலில்-
ஈர்ப்பு சக்தி மையங்களையே நமது வேதங்கள் பாம்பு வடிவில் குறிப்பிடுகின்றன - என்கின்ற மகத்தான விஞ்ஞான உண்மையினை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்டத்தின் ஈர்ப்பு சக்தியின் விசை நமது உடலினை ஈர்க்கும் ஈர்ப்பு மையத்தை நமது வேதங்கள் குண்டலினி என்றழைக்கின்றன. குண்டலினி என்னும் அந்த ஈர்ப்பு சக்தி மையத்தை நமது வேதங்கள் பாம்பு வடிவில் தான் எடுத்துரைக்கின்றன.
இந்த அண்டத்தின் மையத்தில் ஆதிசேஷன் என்னும் பாம்பின் மேல் பள்ளி கொண்ட பரந்தாமன் இருப்பதாய் நமது வேதங்கள் கூறுகின்றன.
பூமியின் மையத்தில் ஆயிரம் தலைகொண்ட சிந்தாமணி என்னும் பாம்பு பூமியைத் தாங்கிக் கொண்டிருப்பதாய் நமது வேதங்கள் கூறுகின்றன.
நமது உடலில் காந்த மண்டலத்தை உருவாக்கும் பிங்கலை இடகலை நாடிகளை நமது வேதங்கள் பாம்பு வடிவில் தான் எடுத்துரைக்கின்றன.
ஈர்ப்பு சக்திகளின் மையங்கள் அனைத்தையும் பாம்பாய் நமது வேதங்கள் எடுத்துரைக்கின்றன. இதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுக்களை எடுத்துரைக்க முடியும்.
சிவன் கழுத்தில் உள்ள பாம்பு - பிள்ளையார் வயிற்றைச் சுற்றியுள்ள பாம்பு - முருகனின் மயில் காலடியில் கிடக்கும் பாம்பு - அம்மன் வழிபாட்டின் ஆதாரமாய் விளங்கும் பாம்பு - அண்டத்தின் மையமாகிய பாற்கடலைக் கடைய பயன்பட்ட வாசுகி என்னும் பாம்பு என எத்தனையோ எடுத்துக் காட்டுக்களைக் கூறலாம்.
அதே வகையில் தான்-
ராகுவையும் கேதுவையும் பாம்பு வடிவில் நமது வேதங்கள் எடுத்துரைக்கின்றன.
பூமியின் நிழலும் - நிலவின் நிழலும் சூரிய, சந்திர கிரகணங்களை ஏற் படுத்துகின்றன என விஞ்ஞானம் கூறுகின்றது.
நமது வேதங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராகுவையும் - கேதுவையும் நிழல் கிரகங்கள் என்று எடுத்துரைக்கின்றன.
நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் வெறும் நிழல் கிரகங்கள் மட்டுமே - ஏனைய கிரகங்களைப் போல் மண், காற்று, தீ, நீர் போன்ற பஞ்ச பூதங்கள் ஏதும் அக்கிரகங்களில் கிடையாது.
எனவே -
ராகுவையும் - கேதுவையும் சாயா கிரகங்கள் என்று நமது வேதங்கள் எடுத்துரைக்கின்றன. சாயா என்றால் நிழல் என்று பொருள்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூமி - சந்திரன் ஆகியவற்றின் நிழல்களைக் கண்டுபிடித்து அவற்றை நிழல் கிரகங்கள் என்று பாமரமக்களுக்கும் புரியும் வகையில் எடுத்துரைத்த நமது வேதங்களின் பெருமைகளை உலகறிய உரத்தக் குரலில் நாம் எடுத்துரைக்க வேண்டும்.
அந்த நிழல் கிரகங்கள் பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு சக்திகளை உள்ளடக்கியவைகளாய் இருப்பதால் அந்த நிழல்கள் பூமியின் மீதோ சந்திரனின் மீதோ விழும் போது அதில் பூமி மற்றும் சந்திரனின் ஈர்ப்பு சக்திகளின் விசைகளும் ஒன்றையொன்று எதிர்த்து எத்தனையோ பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
ராகு கேது என்னும் நிழல் கிரகங்களினுள் உள்ளடங்கியுள்ள ஈர்ப்பு சக்தி விசைகள் மனித குலத்திற்கு மிகப் பெரிய பாதிப்புக்களை உருவாக்குவதால் தான் நமது வேதங்கள் சூரியனையும் - சந்திரனையும் பாம்பு
விழுங்குவதாய் மக்களை எச்சரிக்கின்றன.
பாம்பு என்பது ஈர்ப்பு சக்தி விசைகளின் மொத்த வடிவம்.
எனவே தான் -
ராகு,கேது என்னும் நிழல் வடிவிலான ஈர்ப்பு சக்தி விசைகளை ஹிந்து வேதங்கள் சந்திரனையும் - சூரியனையும் பாம்பு விழுங்குகின்றது என்று விவரித்தன.
இது போன்று நமது ஹிந்து வேதங்களில் உள்ள மகத்தான விஞ்ஞான உண்மைகளை உலகிற்கு காலத்திற்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்து மிகப் பெரிய ஹிந்து எழுச்சியை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறி எனது உரையினை முடித்துக் கொள்கின்றேன்.
நன்றி, வணக்கம்.
----------------------------
மருத்துவத் தென்றல்
ஃபேட்டி லிவர் (fatty Liver)
தொடர்ந்து மது அருந்துபவர்கள், உடல் பருமன் உள்ளவர்களுக்கு மட்டுமே 'ஃபேட்டி லிவர்' என்னும் கல்லீரலில் கொழுப்பு சேரும் நோய் வரும் என்று பலரும் நினைக்கின்றனர். ஆனால், மதுப்பழக்கமே இல்லாத பலருக்கும் இந்த பாதிப்பு இருப்பதை, மருத்துவர்கள் தற்போது அதிகம் கண்டறிந்து வருகின்றனர்.
இதில் கவனிக்க வேண்டியது இவர்களில் பலர் ஒல்லியாகவும், பார்ப்பதற்கு மிகவும் ஆரோக்கியமாகவும் இருப்பவர்கள். சரியான உடல் எடையுடன் இருந்தாலும், உடலின் வளர்சிதை மாற்றத்தில் குறைபாடுகள் இருந்தால், கல்லீரலில் கொழுப்பு சேருகிறது.
உலகம் முழுவதும் தற்போது மிகவும் பொதுவாக காணப்படும் நாள்பட்ட கல்லீரல் நோயாக 'ஃபேட்டி லிவர்' உள்ளது. சர்க்கரை நோய் உள்ளவர்களில், 50-70 சதவீதம் பேருக்கு ஃபேட்டி லிவர் பாதிப்பு இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பார்ப்பதற்கு ஒருவர் ஒல்லியாக இருந்தாலும், அவரது கல்லீரல், கணையம் மற்றும் குடல் போன்ற உள்ளுறுப்புகளைச் சுற்றி அதிகப்படியான கொழுப்பு சேர்ந்திருக்கலாம். 'உள்ளுறுப்பு கொழுப்பு' எனப்படும் இந்த மறைந்திருக்கும் கொழுப்பு; தோலுக்கு அடியில் சேரும் கொழுப்பை விட மிகவும் ஆபத்தானது.
இன்றைய நவீன வாழ்க்கை முறை இப்பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களை விட, தெற்காசியர்களுக்கு குறைவான உடல் எடையிலேயே இன்சுலின் எதிர்ப்பு ஏற்படும் தன்மை உள்ளது. இந்த இன்சுலின் எதிர்ப்பு, கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கு காரணமாகிறது.
இதனால் இந்தியர்கள் அதிக உடல் எடையுடன் இல்லாவிட்டாலும், வளர்சிதை மாற்ற குறைபாடுகளால் வரும் நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
தொடர்ந்து சோர்வாக இருப்பது, சாப்பிட்ட உடனே வயிறு கனமான உணர்வு, அடிக்கடி வயிறு உப்புசம், வயிற்றில் அசவுகரியம் போன்றவை. இந்த அறிகுறிகள் பெரும்பாலும் லேசானதாகவும், குறிப்பிட்ட நோயை குறிக்காதவகையிலும் இருப்பதால், இவற்றை நாம் எளிதில் அலட்சியப்படுத்தி விடுகிறோம்.
இந்த பாதிப்பை கண்டறியாமல் விட்டால், இது படிப்படியாக கல்லீரல் சுருக்கம், கல்லீரல் செயலிழப்பு மற்றும் சில சமயங்களில் கல்லீரல் புற்று நோயாகக் கூட மாறலாம்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, ட்ரைகிளிசரைடுகள், தொப்பை உள்ளவர்கள், தூக்கத்தில் மூச்சுத்திணறல், நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய், கல்லீரல் நோய் இருப்பவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை சேர்க்காத காபி தினமும் 3 கப் குடிப்பது நல்ல பலன் தரும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மைதா போன்ற மாவுச் சத்து உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், நார்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த சரிவிகித உணவைச் சாப்பிட வேண்டும்.
தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும்; வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி, வாரத்திற்கு இரண்டு முறையாவது தசை வலுவாக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
தினமும் இரவில் 7-8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும்.
மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
தத்துவத் தென்றல்
துன்பம் தான் உறவினரையும், நண்பர்களையும் அளக்கும் அளவுகோல்.
அன்பு,அறிவு வெளியில் தெரியாது - அவை செயல் படும் போது மட்டுமே உணர முடியும்.
பொது இடத்தில் நாகரீகமாக நடத்தல், பணியில் நேர்மை உண்மையுடன் நடத்தல் - இவை நமது செயல்களில் ஒழுக்கத்தையும், நேர்த்தியையும் உருவாக்கும். ஒழுக்கமே வாழ்வின் அஸ்திவாரம்.
சேர்த்து வைத்த பொருள் முதுமைக்கு உதவும் – சேர்த்து வைத்த புண்ணியம் நம் வம்சத்திற்கே உதவும்.
- திரு.S.S.A.M.ராமமூர்த்தி, சங்கர் டைல்ஸ், சிவகாசி.
97904 22201
----------------
தகவல் தென்றல்
ஒருமுறை பயன்படுத்தும் 'பேப்பர் கப்', லட்சக் கணக்கான பிளாஸ்டிக் நுண்துகள்களை வெளியிடுகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. உலகளவில் டீ, காபி உட்பட சூடான பானம் அருந்துவதற்கு தினசரி லட்சக்கணக்கானோர் 'பேப்பர் கப்' பயன்படுத்துகின்றனர். இது பெரும்பாலும் காகித த்தால் செய்யப்பட்டாலும், நீர் கசிவை தடுப்பது, உறுதி தன்மையை அளிப்பதற்காக மெல்லிய பிளாஸ்டிக் பூச்சு பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் பாலி எத்திலின் (பி.இ.), பாலிலேக்டிக் அமிலம் (பி.எல்.ஏ.) வகை 'பேப்பர் கப்'களை விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். இதில் பி.எல்.ஏ. வகை பேப்பர் கப், பி.இ. வகையை விட 12 மடங்கு அதிகமான பிளாஸ்டிக் நானோ நுண்துகள்களை வெளியிடுவதை கண்டறிந்தனர். ஒரு நானோ துகள் என்பது, மனித முடியின் தடிமனை விட ஆயிரம் மடங்கு மெல்லியது. இதனால் 'பேப்பர் கப்' பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
பூமியை தாக்கும் வாய்ப்புள்ள விண்கல்லின் திசையை மாற்றும் 'டார்ட்' தொழில்நுட்பத்தை 'நாசா' சோதனை செய்துள்ளது. இந்நிலையில் முன்கூட்டியே முடியாமல், கடைசி நேரத்தில் கண்டறியும் விண்கல்லை தகர்க்க அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன்படி அணு ஆயுதத்தை விண்கல் மீது நேரடியாக மோதாமல், சில கி.மீ., தூரம் முன்பே வெடிக்க செய்கின்றனர். இது வெளியிடும் எக்ஸ் கதிர்கள் விண்கல்லை ஆவியாக்கி வெடிக்க செய்கிறது என தெரிவித்துள்ளனர். 524 அடி அகல விண்கல்லுக்கு, 1 மெகா டன் அணு ஆயுதம் பயன்படுத்தப்படும்.
கொசுவின் வாய்ப்பகுதியில் ஆறு நுண்ணிய குழல்தள் உள்ளன. இதில் இரண்டு தோலில் துளையிடுகிறது. மற்ற இரண்டு, தோலை விரித்து இழுத்து பிடித்துக் கொள்ளவும்,5வது குழல் துளையின் உள்ளே சென்று ரத்த நாளத்தை அடைந்து உறிஞ்சுகிறது. இதன் முனையில் ரத்தத்தை உணரும் உணர்வி செல்கள் உள்ளதால் தோலுக்கு அடியில் ரத்தக் குழாய்களை கண்டறிந்து துளைக்கிறது. ஹபோபேரிங்ஸ் எனும் 6வது குழல் வழியே ரத்த த்தில் தன எச்சிலைக் கொசு செலுத்துகிறது. இந்த வழியேதான் நோய் ஏற்படுத்தும் கிருமிகளும் உடலில் நுழைகின்றன.
சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு அடுத்து முதலாவதாக புதன், இதை தொடர்ந்து வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இந்நிலையில் சூரியனுக்கு அருகில் (5.8 கோடி கி.மீ., தூரம்) இருக்கும் புதன் கோளை விட, இரண்டாவதாக உள்ள (10.8 கோடி கி.மீ., தூரம்) வெள்ளி கோள் வெப்பமாக உள்ளது. இதன்படி புதனின் சராசரி வெப்பநிலை மைனஸ் 180 டிகிரி செல்சியஸ். வெள்ளியின் சராசரி வெப்பநிலை 464 டிகிரி செல்சியஸ். சூரியன் உடனான தூரத்தை வைத்து கோள்களின் வெப்ப நிலை இல்லை. கோள்களின் வளிமண்டலத்தை பொறுத்தே வெப்பநிலை அமைகிறது. புதனுக்கு வளிமண்டலம் இல்லை. இதனால் பகல் வெப்பநிலையை, இரவில் தக்கவைக்க முடியாமல் மைனஸ் நிலைக்கு செல்கிறது. ஆனால் வெள்ளி வளிமண்டலத்தில் 96.5 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு இருப்பதால் பகல், இரவில் வெப்பநிலையை தக்க வைப்பதால் வெப்பமாக உள்ளது.
முகப்புத் தென்றல்
பாரி வள்ளல்
சங்ககால மன்னன் பாரி ஒரு இந்து மன்னன். அவனுக்கு ஆலோசகரும் வழிகாட்டியுமாக இருந்தவர் ஒளவையார். பாரி ஆதரித்த இன்னொரு புலவர் கபிலர். அவர் கொடுத்த இந்து நூல்கள் ஏராளம் .
பாரியின் வரலாறு தமிழகத்தில் பெரிதாக சொல்லபடவில்லை என்றாலும் புறநானூற்று பாடலின் வழி அவன் நாடு பாண்டிய நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையில் இருந்திருக்கின்றது. அதன் மேற்கு பக்கம் சேரநாடும் வந்திருக்கின்றது
எப்போதும் வல்லரசுகள் இடையில் இருக்கும் நாட்டை சந்தேகத்துடனே பார்க்கும். இது அரசியல். அவ்வகையில் பல அரசியல் மற்றும் இதர காரணங்களுக்காக பாண்டிய சோழ அரசுகள் அவனோடு மோதின . இதில் சேர அரசும் கலந்து கொண்டது.
ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் எல்லோரையும் பகைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒளவையார் போன்றோர் முதலில் முயன்றும் பின் விவகாரம் போரில் முடிந்தது. அவன் புரும் கொடிடயாளியாக இருந்தான், முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி என்பது அவனின் இரக்க குணம் குறித்து புலவர்கள் பாடியுள்ளார்கள்.
பாரியின் வாழ்வில் இந்துக்களின் தனிபெரும் வாழ்வியல் உண்டு. ஈகை கொடை வீரம் பக்தி என எல்லாமும் உண்டு. முக்கியமாக பெண்களை காக்கும் அறம் உண்டு.
பாரி வீழ்ந்தபின் அவன் மகள்கள் அங்கவை சங்கவை அனாதையாகி கபிலரிடம் அடைக்கலமானார்கள். அதை அறிந்த ஒளவையார் மூவேந்தர் துணையுடன் அவர்களுக்கு மலையமான் எனும் மன்னனை கட்டிவைத்தாள்.
பாரியின் வாழ்வில் எங்கு திரும்பினாலும் ஒளவையாரை காணமுடியும். அக்கால இந்துக்கள் பெண்களுக்கு கொடுத்த பெரும் இடம், சுதந்திரம், அரசியல் மட்டம் அளவு கொடுத்த செல்வாக்கினை காணமுடியும்.
பாரி பிரான்மலை பக்கம் ஒரு சிவன்கோவிலில் வணங்கியவன், அவன் மகள்களுக்கு ஒளவையார் மூவேந்தருடன் திருமணம் செய்துவைத்த உத்தமசோழபுரம் ஆலயத்தில் ஒளவையார் பாரி மகள்கள் சிலை இன்றும் உண்டு.
பாரி மாபெரும் சிவபக்தன். அவனின் சிவபக்தி எந்த அளவு இருந்தது என்பதை அவன் சந்ததிகள் சொன்னது. அவன் கர்மபடி அவன் வீழ்ந்தாலும் அவன் கொண்டிருந்த சிவபக்தி அவன் வம்சத்தை சிவனடியார் வம்சமாக்கியது.
'பாரிமகளிரின் பைந்தொடி முன்கை பிடித்தோர் வழி வரு குரிசில் சித்தவடவன்' என்பது சங்க்கால பாடல்வரி.
அதாவது பாரி மகளிரை மணம் செய்தவர்களின் வழி வந்த அரசன் சித்தவடவன் என்பது பொருள். இந்த சித்தவடவன் மகளே வானவன் மாதேவி.
இவளின் மகன்தான் சோழமன்னரில் சிறந்தவனும், அழியா பெரும் ஆலயம் சிவனுக்கு தந்தவனுமான ராஜராஜ சோழன்.
'தெய்வக்கவிதைச்செஞ்சொற்கபிலன் மூரிவண்தடக்கை
பாரிதனடைக்கலப் பெண்ணைமலையற் குதவிப்பெண்ணை
அலைபுனல் அழுவத்து அந்தரிட்சம்செல மினல்புகும்விசும்பின்
வீடுபேறெண்ணி கனல்புகும் கபிலக்கல்லது'
இது ராஜராஜ சோழனே தன் முன்னோர் என பாரி பற்றி செதுக்கிய வரி.
பாரி எப்படியானவன் என்பதை சுந்தரே பாடுகின்றார். நாயன்மார்களில் ஒருவரும் நால்வரில் ஒருவருமான அவர் பாடுகின்றார் ,
'மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்குஇவனென்று
கொடுக்கிலாதானைப் பாரியே என்று கூறினுங்கொடுப்பாரிலை
பொடிக்கொள் மேனிஎம் புண்ணியன்புக லூரைப்பாடுமின் புலவீர்காள்
அடுக்குமேல் அமர் உலகாள்வதற்(கு)யாதும் ஐயுறவில்லையே'
ஆம். சுந்தரர் சிவனருள் பெறாதவர்கள் யாரையும் பற்றி பேசியதே இல்லை. அப்படியானவர் சிவனருள் கொண்டவன் பாரி என்பதால் பாடியிருக்கின்றார் சோழ நாடெங்கும் அவனுக்கு தனி வரலாறு இருந்திருக்கின்றது.
உண்மையில் கரிகால் சோழன் போல அவன் மூவேந்தரையும் மிரட்டியிருக்கின்றான்.
அவனை விட்டால் தங்கள் மூவரையும் ஒழித்துகட்டிவிடுவான் என்றுதான் அந்த போர் நடந்திருக்கின்றது.
அங்கே அவன் வீழ்ந்தாலும் அவன் வாரிசுகள் சோழ நாட்டை ஆண்டிருக்கின்றன. அவன் ஆசைபட்ட அத்தனையும் சிவனருளில் அவன் சந்ததிகள் செய்திருக்கின்றன. ராஜராஜ சோழன் அதில் பெரும் அடையாளம்.
ஆக இத்தனை சிறப்புக்களை கொண்டவன் பாரி. அவன் உத்தமமான சிவனடியார். அவனின் சிவதொண்டும் கொடைதன்மையும் ஏராளம்.
அவன் கொடையில் சிறந்தவன் ஆனால் யாரை ஆதரித்தான் என்றால் அடியார்களை, சிவனடியார்களை பக்தர்களை நிரம்ப ஆதரித்தவன் அதைத்தான் சுந்தரரும் பாடுகின்றார்.
ஒரு உத்தமமான இந்து மன்னனை, ராஜராஜ சோழனின் முன்னோர்களில் ஒருவனை மிக சிறந்த சிவபக்தனை பற்றி உண்மையினை மறைத்து ஏதோ புனைவில் எழுதபட்ட நூல் கொண்டாடபடுகின்றது என்றால் இச்சமூகம் எத்தனை தூரம் தன் இந்து அடையாளத்தை தன் ஞான வைராக்கிய பாரம்பரியத்தை மறந்துவிட்டது என்பதை நினைக்கும் போது எதிரிகள் எவ்வளவு தூரம் வெற்றிபெற்றிருக்கின்றார்கள் என்பது புரிகின்றது.
பாரியின் வரலாறு கம்யூனிஸ்ட்டுகளாலும் திராவிடர்களாலும் திரிக்கபட்டு 'வேள்பாரி' என வந்து அதை எல்லோரும் கொண்டாடுகின்றார்கள் என்றால் எதிரிகள் எவ்வளவு திறமையானவர்கள். இந்துக்கள் எவ்வளவுக்கு வீழ்ந்துவிட்டார்கள் என்பதையும் உணரமுடிகின்றது, கண்ணீர்தான் மிஞ்சுகின்றது.
11.தொலைந்து போன பாரம்பரியங்கள்
டாக்டர் எஸ்ஸெஸ்பி
''குல ஒழுக்கம் சிதைந்த மனிதனுக்கு நிலையான நரக வாசம் ஏற்படுகின்றது''
-ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம்-1 சுலோகம்-44
-என்று ஸ்ரீமத் பகவத் கீதை கூறுகின்றது.
''கருமம் செயவொருவன் கைதூவோன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்''
-திருக்குறள் அதிகாரம் 103 குறள் 1021
-என்று திருவள்ளுவர் கூறுகின்றார்.
''வீட்டையும் நாட்டையும் மேன்மை அடையச் செய்யும் செயலையே செய்வேன் என மனஉறுதி கொள்ளுவதால் ஏற்படும் பெருமையைக் காட்டிலும் மேலான பெருமை வேறு கிடையவே கிடையாது''
-என்பது இத் குறளின் பொருளாகும்.
மனித மாண்பு என்பது குடும்பமாய் வாழ்வதன் மூலம் மட்டுமே உண்டாகும் உன்னதம் ஆகும்.
மனித மாண்பினை வேறு எந்த வழியிலும் உருவாக்க முடியாது-வெளிப்படுத்த முடியாது- நிறுபிக்க முடியாது.
மனித மாண்பினை விளைவிக்கும் ஒரே விளை நிலம் குடும்பமே ஆகும்.
இதை உலகிற்கு எடுத்துரைத்த ஒரே மதம் ஹிந்து மதம் மட்டுமே ஆகும்.
மனிதர்கள் குடும்பமாய் வாழவேண்டிய அத்தியாவசியத்தை-அடிப்படையை-நாகரீகத்தை ஹிந்து வேதங்கள் மட்டுமே போதித்தன.
இந்த மகத்தானப் பெருமையை ஒவ்வொரு ஹிந்துவும் நெஞ்சை உயர்த்தி-மார்தட்டி- உலகிற்கு உரக்க எடுத்துரைக்க வேண்டும்.
பொதுவாகவே-
நமது ஹிந்து மதத்தைப்பற்றி குற்றம் குறைகள் கூறுவதையே வாடிக்கையாகப் பலரும் கொண்டிருக்கின்றார்கள். ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்யவேண்டும் என்கின்ற ஒரே அடிப்படை உள்நோக்கம் காரணமாகவே நமது மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு இத்தகைய வன்மங்களை அவர்கள் கக்கிக் கொண்டிருப்பார்கள்.
இதன் காரணமாகவே ஹிந்துக்கள் பலரும்-நம் மதம் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டு - தன்னை ஒரு ஹிந்து-என்று வெளிப்படையாய் சொல்ல அச்சம் கொள்கின்றார்கள். சமுதாய அரங்கில் ஹிந்து ஒற்றுமை என்பது கானல் நீராய் ஆகி வருவதன் பல்வேறு அடிப்படை காரணங்களில் இதுவும் ஒன்று.
வேறு எந்த மத நூல்களிலும் மனிதன் குடும்பமாய் வாழவேண்டிய அத்தியாவசியம் குறித்து எவ்வித குறிப்பும் கிடையவே கிடையாது.
வேறு எந்த மதமும் - அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று போதித்ததே கிடையாது.
உயரிய உன்னதமான மனித மாண்பினை-நாகரீகத்தை-உலகிற்கு கற்பித்த மதத்திற்குச் சொந்தகாரர்கள் நாம் என்பதை நெஞ்சம் நிமிர்த்தி உலகிற்கு எடுத்துச் சொல்லுங்கள்.
அதே சமயம் -
அறம்-பொருள்-இன்பம்-வீடு என்று நம் மதம் போதித்த உயரிய உன்னதமான மகத்தான வாழ்வியல் தர்மங்களைப் போற்றி பாதுகாக்க வேண்டிய கடமையும் நமக்கு இருப்பதை உணருங்கள்.
நமது பண்பாடு கலாச்சாரத்தின் அஸ்திவாரமாய் விளங்கும் குடும்ப பாரம்பரியத்தை நாம் சிறிது சிறிதாக சிதைத்து வருகின்றோம். தொலைத்து வருகின்றோம்.
நமது பண்பாடு கலாச் சாரத்தின் அடிப்படையே குடும்ப உறவு முறைகள்.
அதை என்றும் நாம் தொலைத்து விடக்கூடாது.
குடும்பம் தழைத்தோங்கினால் ஹிந்து மதமும் நிச்சயம் தழைத்தோங்கும். குடும்ப பாரம்பரியம் தழைத்தோங்கினால் நம்மை மதம் மாற்றும் சூழ்ச்சி காரணமாகவே நம் மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சிக் கொண்டு நம்மை குற்றம் குறைகள் கூறும் வீணர்களும் காணாமல் போய் விடுவார்கள்.
(தொடரும்)
கெட்டிக்காரர்களின் பொய்யும் புரட்டும்-4
மேமாக இதழில் "பாரத கல்விக் கூடங்கள்"- என்ற கட்டுரையில் அன்றைய ஆங்கிலேய அரசின் புள்ளி விபரப்படி அன்றைய குருகுலம் கல்வி முறையில் மிக அதிக அளவில் சூத்திரர்களே கல்வி பயின்றார்கள் என்பதை ஆதாரங்களுடன் கூறும் "அழகிய மரம்"-என்ற நூலின் விபரங்கள் வெளியிடப் பட்டன.
இது குறித்து மதிப்பிற்குரிய தமிழாகரர் திரு.தெ. முருகசாமி ஐயா அவர்கள் கூறிய கருத்துக்களுக்குக் கடந்த மூன்று மாதங்களாய் பதிலளித்தேன்.
ஐயா அவர்கள்-"வேதம் படிக்க அந்தணர்க்கே தகுதி என்றதால் பிறர் படித்துவிடக் கூடாது என்பதற்காகவே எழுதி வைக்கப் படவில்லையாம். இது ஒரு காலத்திய உண்மை.
இந்த உணர்வு காலா காலமாக இருந்து வந்த்தன் துளிர்ப்பில் உரைக்கப்பட்டதன் வரி தான்-"கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே" என்ற புற நானூற்றில் (183) பாண்டியன் ஆரியபடை கடந்த நெடுஞ்செழியன் என்ற நாடாளும் வேந்தன்,'கல்வி பரவலாக்கப்பட வேண்டியதன்' உண்மையை மன்னனே கூறினான் என்றால் கல்வி ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டதன் கூறு தெரிகின்றது. இதை எதிர்த்துக் குரல் கொடுத்த சிறுபாண்மையின் தொடர்ச்சியைத் தான் பிராமணரான பாரதி "வேதம் புதுமை செய்" என்றார் என்றால் தொன்று தொட்ட வரலாற்றை மறைக்கவோ மறுக்கவோ முடியாது"
-என்று ஐயா அவர்கள் கூறியுள்ள கருத்திற்கு இந்த இதழில் பதில் கூறுகின்றேன்.
தமிழாகரர் திரு.தெ. முருகசாமி ஐயா அவர்கள் எப்போதுமே அரை வரி அல்லது ஒருவரியை எடுத்துக்கூறி அப்பாடலின் பொருளினை திரித்து மறைத்து அவர் இஷ்டத்திற்குப் முற்றிலும் மாறுபட்டு கூறுவதை வழக்கமாகக் கொண்டவர்.
-"கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே"
என்று ஐயா அவர்கள் கூறியுள்ள புறநானூறு(183) பாடல் வரியின் முழுபாடலினையும் அதன் முழு பொருளினையும் முதலில் காண்போம்.
உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே
பிறப்பு ஓரன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.
-புறநானூறு பாடல் 183
இப்பாடலின் பொருள்-
"ஆசிரியருக்குத் துன்பம் நேரும்போது உதவ வேண்டும். அவருக்கு நிறைந்த செல்வம் கொடுக்க வேண்டும். அவரைப் பின்பற்றி நடப்பதற்குத் தயங்கக் கூடாது. இப்படி கல்வி கற்பதே முறையாகும். இது பெரிதும் நன்மை பயக்கும்.
ஏனென்றால்-
தன்வயிற்றில் பிறந்த உடன் பிறப்புகள் பலருள் மூத்தவனை அழைக்கமால் அவர்களில் கல்வி கற்ற சிறப்புடைய இளையவனைத் தேடியே தாயின் மனமும் திரிந்து செல்லும்.
ஒரே குடியில் பிறந்த பலரில் மூத்தவனை வருக என்று அழைக்காமல் அவர்களில் அறிவுடையவன் வழியில் அரசாட்சியும் நடைபெறும்.
வேற்றுமை உடைய நான்கு வருணத்தாரிடம் கீழ்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் உயர்ந்த குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடிபணிவான்"
-என்பதே இப்பாடலின் பொருளாகும்.
குருகுலம் கல்வி முறையின் சிறப்பையும்- ஆசிரியப் பெருமக்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய தொண்டுபற்றியும்- கல்வியின்மேன்மை பற்றியுமே இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளது.
இதில்-
ஐயா அவர்கள் திரித்துக் கூறுவது போல் - கல்வி ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டதன் கூறு தெரிகின்றது-என்கின்ற பொருள் தரும் சொற்கள் கிஞ்சித்தும் இல்லவே இல்லை.
சமுதாயத்தின் கீழ்தட்டில் பிறந்த ஒருவன் கல்வி கற்றிருந்தால் மேல் தட்டு மக்களும் அவனைத் தேடி வந்து அவனுக்குக் கீழ்படிந்து நிற்பர் -என்று கீழ்தட்டு மக்களை மேன்மையடையச் செய்யும் வழிமுறை தான் கூறப்பட்டுள்ளது.
இப்பாடலில் இருந்து கீழ்தட்டு மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட வில்லை என்பது தெள்ளத் தெளிவாய்தெரிகின்றது. மேலும் கீழ்தட்டு மக்கள் ஒதுக்கி வைக்கப்படவில்லை-கல்வி கற்றால் சமுதாய அரங்கில் மதிப்பு மரியாதையுடன் வலம் வரலாம் என்பதும் தெள்ளத் தெளிவாய் புலப்படுகின்றது.
ஐயா அவர்கள் இனியாவது ½ வரி அல்லது ஒருவரியை மட்டும் எடுத்துரைத்து பொருளினைத் திரித்துக் கூறும் முயற்சிகளைக் கைவிடவேண்டுமாய் மன்றாடி அவரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.
குருகுலக் கல்வி முறையின் சிறப்பினை இப்பாடலின் மூலம் புரிந்து கொள்ள வேண்டுமாய் ஐயா அவர்களைக் கேட்டுக் கொள்கின்றேன்.
குருகுலத்தென்றல் செப்டம்பர் - 2026
-----------------------------------------------------------------------------------------
33-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம்
(09-09-2026)
முதல் இதழின் முதல் பக்கத்திலிருந்து....
நாங்கள் பத்திரிக்கைத் துறையை எட்டிப் பார்க்கின்றோம்.
நாங்கள் முழுநேர பத்திரிக்கையாளர்கள் அல்ல. அதே சமயம் பொழுது போக்காய் புலம்புகின்றவர்களும் அல்ல.
நாங்கள் கர்ம வீரர்கள். நல்லறமாய் இல்லறத்தை நடத்துபவர்கள். எங்கள் குடும்பத்திற்குப் பொருளையும் புகழையும் ஈட்டும் பொருட்டு இடைவிடாமல் இயங்கிக்கொண்டிருப்பவர்கள்.
ஆனாலும்-
நாங்கள் சமுதாயத்தை நேசிக்கின்றோம். காதலிக்கின்றோம். அதனால் சமுதாய அரங்கில் எங்கள் உள்ளத்து எண்ணங்களுக்கு எழுத்துவடிவம் கொடுத்து அரங்கேற்றம் செய்ய பத்திரிக்கைத் துறையைப் பலகணி வழியே எட்டிபார்க்கின்றோம்.
நாங்கள் ஆன்மீகத்தை அடிப்படையாய்க் கொண்டவர்கள். ஆனால் அடிப்படைவாதிகள் அல்ல. கடவுளையும் விஞ்ஞான கலர்பூசிய கண்ணாடி வழியே தரிசிக்க விரும்பும் நவநாகரீக மனிதர்கள்.
நாங்கள் எழுத இருப்பது புதுக்கவிதை. ஆனால் இலக்கண இசைநயம் உடையது.
நாங்கள் எதையும் சாதித்துக் காட்ட நினைப்பவர்கள். எங்கள் குருகுலத்தெள்றல் இதழ் மூலம் உங்கள் கவனத்தை எங்கள் பால் கவர்ந்திழுத்து சாதனை செய்துகாட்ட நினைக்கினறோம்.
நாங்கள் படைக்கின்றோம்...அதை உங்கள் முன் படைக்கின்றோம்...
நாங்கள் வெற்றி பெறும் வரம் தாருங்கள்...
டாக்டர் V.K.S. சிவதக்திபாலன் MBBS.,DcCH.,
Cell No: 98434 25128.
E-mail: drssbgurukulam@yahoo.com
web site: gurukulathendral.org