மேடைத் தென்றல்

வேதம் புதுமை செய் - 3

(01-02-2026 அன்று சிவகாசி அனுப்பங் குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராம்ஜி பாலிபேக்ஸ் வளாகத்தில் நடைபெற்ற ஹிந்து ஒற்றுமைத் திருவிழாவில் குருகுலத் தென்றல் ஆசிரியர் டாக்டர் V.K.S.சிவசக்தி பாலன் அவர்கள் வழங்கிய தலைமையுரை)


சாதாரண நமது சூரியனின் வெப்பநிலை 2.7 கோடி டிகிரி பாரன்ஹீட் ஆகும். சூரியனைப் போல் எண்ணிலடங்காத நட்சத்திரங்களைத் தம்மிடமிருந்து வெளிப்படுத்திய பிரம்மதேவனின் வெப்பநிலை எவ்வளவு பிரம்மாண்டமானதாய் இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

நமது பிரம்ம தேவன் எதில் தோன்றினார் தெரியுமா?

ஸ்ரீ விஷ்ணு பகவானின் நாபிக் கமலத்தில் தோன்றினார். கமலம் என்றால் தாமரை. எண்ணிலடங்காத நட்சத்திரங்களைத் தம்மிடமிருந்து வெளிப்படுத்திய மிகமிக வெம்மை மிகுந்த பிரம்மா ஸ்ரீவிஷ்ணு பகவானின் நாபியில் முளைத்த தாமரைப் பூவில் தோன்றினார்.

முழுமுதற் கடவுளாகிய சிவன் எழுதி தந்த பாடலை தருமி கொண்டு சென்ற போது அதில் பொருட்குற்றம் உள்ளது என்று நக்கீரர் கூறியதோடு அதற்குப் பரிசுப் பொருள் கிடைப்பதையும் தடுத்தார். இதனால் கோபமுற்ற சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அவரைச் சுட்டெரித்தார். நெற்றிக் கண்ணின் வெப்பம் தாங்காமல் நக்கீரர் ஸ்ரீ மினாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில் உள்ள தாமரைப் பூவினுள் ஒளிந்து கொண்டதாய் மதுரையின் ஸ்தல புராணமாகிய திருவிளையாடல் புராணம் கூறுகின்றது.

ஆக-

மிகமிக வெம்மை மிகுந்தவைகளைத் தாமரைப் பூக்களே தாங்குவதாய் நமது ஹிந்து புராணங்களில் - வேதங்களில் கூறப்பட்டுள்ளன என்பது இவற்றின் மூலம் தெளிவாய் புலப்படுகின்றது.

பரம பதமாகிய கடவுள் நிலை கோடி சூரிய பிரகாசம் கொண்டது என்று நமது வேதங்கள் கூறுகின்றன.

நமது உடலில் ஏழு யோக நிலை சக்கரங்கள் உள்ளதாய் நமது வேதங்கள் கூறுகின்றன.

தலையில் உச்சிப் பகுதியில் உள்ள சகஸ்ராரம் என்னும் ஏழாவது நிலை கோடி சூரிய பிரகாசத்துடன் விளங்கும் பரம நிலையாகிய பிரம்மத்துடன் நம்மை இணைக்கும் யோக நிலையாகும். சகஸ்ராரத்தை மிகப் பிரகாசமான ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரைப் பூவாய் நமது வேதங்கள் விவரிக்கின்றன.

கோடி சூரிய பிரகாசம் என்றால் அது எவ்வளவு பிரம்மாண்டமான வெப்பநிலை கொண்டது என்பதை ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள். அந்த மிகமிகப் பிரம்மாணடமான வெப்ப நிலையைத் தாங்கி நம்மிடம் வெளிப் படுத்தும் ஆற்றல் ஆயிரம் இதழ்கள் கொண்ட பிரகாசமான தாமரை வடிவில் அமைந்துள்ள சகஸ்ராரம் என்னும் யோக நிலைக்கு இருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஆக-

நமது வேதங்கள் - புராணங்கள் - இலக்கியங்கள் சுட்டிக் காட்டும் தாமரை வடிவம் என்பது மிகமிக மகத்தான - பிரம்மாண்டமான - நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத - நம்மால் தாங்கிக் கொள்ளவே முடியாத வெப்பநிலையில் அமைந்துள்ள பொருட்களைத் தாங்கிக் கொள்ளும் தன்மையின் வெளிப்பாடு என்று அறிந்து கொள்ளுங்கள்.

இன்றைய விஞ்ஞான யுகத்தில் நமது வேதங்களின் இது போன்ற மகத்தான உட்கருத்துக்களைப் புதுமை படுத்தி உலகிற்குஉரத்தக் குரலில் எடுத்துரைப்பதை நமது கடமையாய் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அடுத்தது பாம்பு -

ஈர்ப்பு சக்தி மையங்களையே நமது வேதங்கள் பாம்பு வடிவில் குறிப்பிடுகின்றன - என்கின்ற மகத்தான விஞ்ஞான உண்மைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.


உங்களின் நிழல் என்மீது விழலாம் - எனது நிழல் உங்கள் மீது விழலாம் - எத்தனையோ மரத்தின் நிழல்களில் நாம் இளைப்பாறுகின்றோம்.

கோடைக்காலத்தில் சூரியனின் வெப்பம் தாளாமல் ஏதாவது நிழல் கிடைக்குமா என்று நாம் அல்லாடுகின்றோம்.

ஆக-

நிழல்களினால் நாம் புத்துணர்ச்சி அடைகின்றோம் என்பதே உண்மை. நிழல்கள் நம் மீது விழுவதால் நமக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதே இல்லை.

ஆனால்-

பூமியின் நிழல் நிலவின் மீது விழும் போதும்-அல்லது-நிலவின் நிழல் பூமியின் மீது விழும் போதும் நம்மைச் சுற்றி நச்சுத்தன்மை வெளிப்படும் என்று நமது ஹிந்து வேதங்கள் கூறுகின்றன. உலக மகா முட்டாள்களாகிய நம்ம ஊர் அரசியல் கோமாளிகள் கிரகணங்களின் போது பொது வெளியில் அமர்ந்து சிக்கன் சாப்பிட்டு தனது அதி மேதாவித்தனத்தைக் காட்டுவதுண்டு.

அவர்களைப் பொறுத்த வரை-

அப்படி சாப்பிட்டு விட்டால் ஹிந்து மதம் கூறுவதெல்லாம் முட்டாள்தனமானவைகள் - அர்த்தம் கெட்டவைகள் என்று நிறுபித்து விட்டாதாய் அவர்கள் புளகாங்கிதம் அடைந்து கொள்வார்கள்.

சந்திரனை பாம்பு விழுங்குவதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது - சூரியனைப் பாம்பு விழுங்குவதால் சூரிய கிரகணம் ஏற்படுகின்றது என்று ஹிந்து வேதங்கள் கூறுவது உண்மையே.

உங்கள் நிழல் என் மீது விழுந்தாலோ-என் நிழல் உங்கள் மீது விழுந்தாலோ நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் பூமியின் நிழலும்-நிலவின் நிழலும் கிரகணங்களின் போது பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

எத்தனையோ பேர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டதாயும் - எத்தனையோ பெண்களின் கர்ப்பங்கள் பாதிக்கப்பட்டதாயும் விஞ்ஞானம் நிறுபித்து வருகின்றது.

அது ஏன்?

அதற்கான பதிலினை நமது அரசியல் கோமாளிகளினால் கூறமுடியுமா? அதற்குரிய பதில் ஹிந்து மதத்தில் மட்டும் தான் இருக்கின்றது.

-மீதி அடுத்த இதழில்....

குருகுலத்தென்றல் ஆகஸ்டு 2026

--------

தத்துவத் தென்றல்

திரு.S.S.A.M.ராமமூர்த்தி, சங்கர் டைல்ஸ், சிவகாசி. 97904 22201

---------

மூலிகைத் தென்றல்

இரத்த சோகை

திரு.டாக்டர் N.ரமணி சேகர், ரமணி மருத்துவ ஜோதிட ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையம், T.கல்லுப்பட்டி.

94433 19495



--------

சுவைகளும் ஐம்பூதங்களும்

சித்த மருத்துவர் பெ.ரத்.ஜெயபிரபா BSMS., ஜெயராணி கிளினிக், சாட்சியாபுரம், சிவகாசி. 9488445251

நேரடியாக கார உணவுகள் என்றால் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், மிளகுக்காரம் என்பவைகள்.

இன்னும் ஆழ்ந்து பார்க்கும் பொழுது, நம் சித்த மருத்துவம் சுவைகள் அடிப்படையில் கார உணவுகளைப் பற்றிச் சொல்கிறது.

புளிப்பு என்றால் மண் + தீ பூதங்களும்

உவர்ப்பு என்றால் நீர் + தீ பூதங்களும்

கார்ப்பு என்றால் வாயு + தீ பூதங்களும் சேர்ந்தவைகளாகும்.

இயற்கையாக புளிப்பு, உப்பு, கார்ப்பு இம்மூன்றிலும் 'தீ' பூதம் உள்ளதால் இவைகளில் காரம் உள்ளன என்று சொல்கிறது.

புளிப்பு - புளி, தக்காளி, கத்தாக்காய், மாங்காய்.

உவர்ப்பு - உப்பு.

கார்ப்பு - இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், கருவேப்பிலை, வெங்காயம், மிளகு, நறுமணமூட்டிகள்.

நாள்தோறும் பயன்படுத்தும் இப்பொருட்களை அளவிற்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் மிதமாகப் பயன்படுத்தும் பொழுது நலமுடன் வாழலாம். நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

உடலில் அனைத்து மண்டலங்களுக்கும் உணவு முறைகள் சீராக அளிக்கப்படும் போது, வயிறு குன்மம் (ulcer), அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், நாட்பட்டக் கழிச்சல் நோய்கள், வயோதிகத்தில் ஏற்படும் மூட்டு வலி நிவாரணம் இவைப் போன்ற பல பிரச்சனைகள் சரியாக வழி வகுக்கும்.

-------

முகப்புத் தென்றல்

தமிழ் உளவாளி - ராஜாமணி சரஸ்ரவதி

சரஸ்வதிக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் ராஜாமணி. திருச்சிராப்பள்ளியைப் பூர்வீகமாகக் கொண்ட அவரது தந்தை ரங்கூனில் தங்கச் சுரங்கத்தின் அதிபதியாக இருந்தார். பர்மாவில் (மியான்மர்) பெரும் பணக்கார்களில் ஒருவராக இருந்த அவர் இந்தியச் சுதந்திரப் போராட்டத்துக்காக ஏராளமானப் பொருளுதவிகளைச் செய்து வந்தார்.

ராஜாமணியின் குடும்பம் மஹாத்மா காந்தியின் அகிம்சைப் போராட்டங்களை ஆதரித்தது. ஆனால் ராஜாமணி சிறுவயதிலேயே, பொம்மைத் துப்பாக்கியை வைத்து ஆங்கிலேயர்களைக் குறிபார்த்துச் சுடும் விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார்.

பதின்ம வயதில் நேதாஜியின் ஆக்ரோப் பேச்சுகளால் கவரப்பட்டார். அவருடைய புகைப்படங்களையும், செய்தித்தாள்களில் அவரைக்குறித்து வந்த கட்டுரைகளையும் கத்தரித்து பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டார்.

நேதாஜி, இந்திய தேசிய இராணுவத்துக்கு நிதி திரட்டுவதற்காக ரங்கூனுக்குச் சென்றார். அவர்கள் அமைத்திருந்த கூடாரத்துக்குச் சென்று, தன்னிடமிருந்த தங்க வைர நகைகளைத் தானமாகக் கொடுத்தார் ராஜாமணி.

ஒரு சிறபெண் ஏராளமான நகைகளைக் கொடுத்திருக்கிருக்கிறாள் என்கிற விஷயம் நேதாஜிக்குத் தெரியவந்தது. சிறுபெண் அறியாமல் கொடுத்திருக்கலாம் என எண்ணி ராஜாமணியின் வீட்டுக்குச் சென்றார். அவரது தந்தையிடம் நகைகளைத் திருப்பிக் கொடுத்தார்.

ஆனால் ராஜாமணி, 'இவை நான் மனமுவந்து விடுதலைப் போராட்டத்துக்காக கொடுத்தவை, இவற்றை என்னால் திரும்பப் பெற்றுக்கொள்ளவே முடியாது' என உறுதியாக மறுத்துவிட்டார். விடுதலைப் போராட்டத்தில் தனக்கிருக்கும் ஆர்வத்தையும், இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றும்விருப்பத்தையும் தெரிவித்தார்.

அவரது எண்ணத்தைக் கண்டு வியந்த நேதாஜி, 'லட்சுமி போவாள் வருவாள், ஆனால் சரஸ்வதி ஒருவரிடம் வந்தால் திரும்பிச் செல்லமாட்டாள், உன்னிடத்தில் இருக்கும் சரஸ்வதி அற உணர்வையும் துணிச்சலையும் வழங்கி இருக்கிறாள். இனிமேல் நான் உன்னை சரஸ்வதி ராஜாமணி என்றே அழைக்கப் போகிறேன்' என்று பாராட்டிப் பேசியிருக்கிறார். நேதாஜி வைத்த சரஸ்வதி, இராஜாமணியின் பெயரோடு நிரந்தரமாகச் சேர்ந்துகொண்டது.

சரஸ்வதி தனது பதினாறாவது வயதில், இந்தியத் தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரில் அடிபட்ட வீரர்களுக்கு உதவும் செவிலியர் பணிதான் முதலில் அவருக்குத் தரப்பட்டது.

தனது துடிப்பான செயல்களால் விரைவிலேயே ஜான்சி ராணி படைப்பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். கேப்டன் லட்சுமி சேஹலிடம் இராணுவப் பயிற்சி பெற்றார்.

முடியைக் குட்டையாகக் கத்தரித்துக் கொண்டு, ஆண் சட்டையை அணிந்து 'மணி' என்னும் சிறுவனாக மாறினார். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து பிரட்டன் அதிகாரிகளுடைய வீடுகளுக்குள் நுழைந்தார். வீட்டைச் சுத்தம் செய்வது, துணிகளை வெளுப்பது, தோட்டங்களை கவனிப்பது போன்ற பணிகளைச் செய்யும் பாவனையில் இரகசியமாக அவர்கள் நடவடிக்கைகளை உளவு பார்த்துக்கொண்டும் இருந்தார். உளவுத் தகவல்கள் கூட்டாளிகளின் மூலமாக நேதாஜியைச் சென்றடைந்தன.

துரதிர்ஷடவசமாக சரஸ்வதியின் கூட்டாளுள் ஒருவரான துர்கா, பிரிட்டன் அகிகாரிகளிடம் அகப்பட்டுக் கொண்டாள்.

கூட்டாளிகள் மாட்டிக்கொண்டால், மற்றவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால் தன் கூட்டாளியை அப்படியே விட்டுப்போக சரஸ்வதிக்கு மனமில்லை. துர்காவைக் காப்பாற்ற விரைவாகத் திட்டம் தீட்டினார்.

பர்மிய நடன மங்கையைப் போல் உடையணிந்து கொண்டு சிறைச்சாலைக்குள் சென்றார்.காவலர்கள் பேசிக்கொண்டிருந்தபோது கையோடு எடுத்துச் சென்ற போதை மருந்தை அவர்கள் குடிக்கும் தண்ணீரில் கலந்தார். தண்ணீரைக் குடித்த காவலர்கள் மயங்கிச் சரிந்தனர். துர்காவும் சரஸ்வதியும் தப்பியோடினர்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த காவலர்கள் இரு பெண்களையும் துரத்திச் சென்றனர். காவலர் ஒருவர் சுட்ட குண்டு சரஸ்வதியின் வலதுகாலைத் துளைத்தது. அதற்குமேல் ஓட முடியாததால் அருகிலிருந்த மரத்தின் மீது இருவரும் ஏறிக்கொண்டனர். காலில் வடிந்த குருதி, பசி, தாகம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இரண்டு நாள்கள் அங்கேயே கழித்தனர்.

மூன்றாவது நாள் ரங்கூனுக்குத் தப்பியோடி தங்களது இராணுவக் கூடாரத்தைச் சென்றடைந்தனர். நேதாஜி, சரஸ்வதியின் துணிச்சலை வெகுவாகப் பாராட்டினார். ஜப்பானிய அரசர், சரஸ்வதிக்குப் பதக்கமும், பணப்பரிசும் வழங்கி கெளரவித்தார்.

இவை அனைத்துமே இரகசியமான உளவுப் பணிகள் என்பதால் சரஸ்வதியின் கூற்றைத் தவிர இவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்திய தேசிய இராணவம் கலைக்கப்பட்டது. சரஸ்வதியின் குடும்பம் ரங்கூனை விட்டு இந்தியாவுக்குக் குடிபெயர்ந்தது.

சில ஆண்டுகள் திருச்சியில் வசித்த பின்னர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார் சரஸ்வதி. சுமார் இருபத்தைந்து ஆண்டுப் போராட்டத்துக்குப் பிறகே அவருக்குத் தியாகிகள் ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றது.

ஒரு காலத்தில் மாடமாளிகையில் வாழ்ந்தவர், எந்த அடையாளமும் இல்லாமல் வாடகை வீட்டில் ஓய்வூதியத்தை வைத்து மட்டுமே ஜீவித்துக் கொண்டிருந்தார். 2005-ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்குச் சொந்தமாக வீட்டையும், கணிசமானளவு தொகையையும் வழங்கியது.

வீடு முழுக்க நேதாஜியின் புகைப்படங்களை மாட்டி வைத்து, வலது கால் ஊனத்தைப் பெருமையாகச் சுமந்து, இராணுவத்தில் உளவாளியாக இருந்த நாள்களை மட்டுமே இறுதிவரை நினைவில் தேக்கிவைத்திருந்த சரஸ்வதி, தனது தொண்ணூறாவது வயதில் காலமானார்.

---------

10. தொலைந்து போன பாரம்பரியங்கள்

டாக்டர் எஸ்ஸெஸ்பி

குடும்பமாய் வாழ்வது மனிதகுலத்தின் மாண்பாகும்.

நம்மைச் சீராட்டி பாராட்டி வளர்த்து ஆளாக்கி மகனிதனாய் சமுதாய அரங்கில் தலை நிமிர்ந்து நிற்க வழிவகை செய்து தருவது குடும்பமே ஆகும்.

அன்பு-ஒழுக்கம்-தீவினையச்சம்-அடக்கம்-புகழ் இவை அனைத்தையும் மனித குலத்திற்கு வாரி வழங்குவது குடும்பமே ஆகும்.

மனிதகுலத்தின் மிக உயரிய மாண்பு குடும்பமே ஆகும்.

எனவே, எந்த சூழ்நிலையிலும் குடும்பத்தின் உயரிய மாண்பு கெடும் வகையில் நாம் செயல்படக் கூடாது என்பதே பாரத பாரம்பரியம்-பண்பாடு ஆகும். அது மனிதகுல மாண்பிற்கு முற்றிலும் எதிரானதாகும்.

"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்

குன்றுவ செய்தல் இலர்"

-என்று வள்ளுவர்கூறுகின்றார்.

பலகோடிப் பொருட்களை அடுக்கிக் கொடுத்தாலும் சிறந்த குடியில் பிறந்தவர்கள் அந்த குடும்பத்தின் சிறப்பு கெடும் வகையில் எவ்வித செயலும் வெய்யக் கூடாது என்பதே இக்குறளின் பொருளாகும்.

இதுவே பாரத பாரம்பரியம் - பண்பாடு ஆகும்.

இதை உரிய முறையில் நாம் இளைய தலை முறையினருக்குக் கற்பிக்க நாம் தவறிவிட்டோம்.

சினிமா மோகத்தில் தறிகெட்டு அலையும் பண்பாட்டிற்கு சமுதாயம் சிறிது சிறிதாய் மாறி வருவது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் செயலாகும்.

அதிலும்-

ரோட்டோர ரோமியோக்களின் மீது கொண்ட காதலுக்காக குடும்பத்தின் மாண்பு கெடும் வகையில் வீட்டை விட்டே ஓடிப் போவது மனித குலத்தின் அடிப்படை குண நலன்களுக்கு எதிரானதாகும்.

சினிமாக்களில் காதல் காட்சிகளை நாம் இரசிக்கலாம் - ஆனந்த கூத்தாடலாம்-

ஆனால்-

சமுதாய அரங்கில் காதல் ஏன் நடைமுறைக்குச் சாத்தியமில்லததாய் இருக்கின்றது என்பதைப் பகுத்தறிவு கொண்டு சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

தாங்கள் சீராட்டி பாராட்டி வளர்த்து ஆளாக்கிய தங்கள் மகளைச் சமுதாய அரங்கில் உயர்ந்த கெளரவமான கண்ணியமான மணவாளனுக்குக் கைபிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கனவாகவும் -இலட்சியமாகவும் இருக்கும் .

தகுதி-அந்தஸ்து-திறமை-தொழில்-வருமானம்-குடும்ப சூழ்நிலை-பண்பு-பணிவு போன்ற பல்வேறு விஷயங்களைச் சீர்தூக்கி ஆராய்ந்து தங்களின் குடும்பத்திற்கு ஏற்ற ஆண்மகனைத் தேர்வு செய்து மணம் முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எண்ணங்களாய் இருக்கும்.

ஆனால்-

அழகான-பந்தாவான-ஸ்டைலான-பகட்டான-ரோமியோக்களிடம் இன்றைய பெண்கள் ஏமாறுகின்றனர். பெற்றோர்கள் எதிர்பார்க்கின்ற தகுதி-அந்தஸ்து-திறமை-தொழில்-வருமானம்-குடும்ப சூழ்நிலை-பண்பு-பணிவு போன்ற அனைத்திற்கும் இன்றைய பெண்கள் எதிர்பார்க்கிற பந்தா-பகட்டு முற்றிலும் மாறுபட்டு

இருப்பதால் தான் காதலுக்குக் குடும்பத்தார்களிடமிருந்து எதிர்ப்பு வருகின்றது.

காதலுக்காக யாரையும்-எதையும் எதிர்க்க வேண்டும் என்று சினிமாக்கள் மூலம் இன்றைய இளைய சமுதாயத்திற்குக் கற்பிக்கப்பட்டு வருவதால் எதிர்ப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்துள்ள உண்மைகளை ஆராய அவர்கள தவறி விடுகின்றார்கள். அவர்களின் பகுத்தறிவு அந்தளவிற்கு பாழ்பட்டுவிட்டது.

இதன் காரணமாய் குடும்பப் பகை - வன்மம்-ஆத்திரம்-ஆவேசம் என்று சமுதாயத்தில் ஏற்படுகின்றது.

ரோட்டோர தறுதலையின் பின்னால் தங்கள் மகள் ஓடிப்போய் விட்டால் சீராட்டி - பாராட்டி-கண்ணும் கருத்துமாய் வளர்த்த எந்த தகப்பனுக்குத்தான் ஆத்திரம் வராமல் இருக்கமுடியும்?

சில நேரங்களில் இந்த பகை-வன்மம் கொலைவரை கூட நீள்வதுண்டு. உடனே அதற்கு ஆணவ கொலை-அது இது - என்று கூப்பாடு போட்டு ஜாதி முலாம் பூச பல அரசியல் சக்திகளும் காத்திருக்கின்றன.

இப்படியாக குடும்பம் -ஜாதி-மதம் என்னும் ஹிந்து மதத்தின் பாதுகாப்பு கவசங்கள் அனைத்தும் திட்டமிட்ட வகையில் பல்வேறு சக்திகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. மிக நேர்த்தியாய் பின்னப்பட்ட இந்த சூழ்ச்சி வலைகளை உணராமல் ஏறத்தாழ நிர்க்கதியான நிலையை நோக்கி ஹிந்து சமுதாயம் சென்று கொண்டிருக்கின்றது என்பதே மிகப் பெரிய உண்மையாகும்.

பேரரசுகள் - சிற்றரசுகள் - குறுநில மன்னர்கள் - என்று எந்த துணையும் இன்றி நின்ற ஹிந்து சமுதாயத்தை மொகலாய படை யெடுப்பு - பிரிட்டிஷ் ஆட்சி என பல்வேறு இக்கட்டான - நெருக்கடியான- காலகட்டத்தில் ஹிந்து சமுதாயத்தைப் பாதுகாத்து கட்டி காப்பாற்றிய முழுபெருமையும் ஜாதி அமைப்புக்களையே சாரும்.

இந்த வரலாற்று உண்மைகளை நமது இளம் ஹிந்து சமுதாயத்திற்கு புரியவைத்து - அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியாக வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஜாதி அமைப்பு முறை ஹிந்து சமுதாய மக்களுக்கான பாதுகாப்பு கவசம் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்.

-தொடரும்....

----------

கெட்டிக் காரர்களின் பொய்யும் புரட்டும்-3

மே மாத இதழில் - பாரத கல்விக் கூடங்கள் - என்ற கட்டுரையில் அன்றைய ஆங்கிலேய அரசின் புள்ளி விபரப்படி அன்றைய குருகுலம் கல்வி முறையில் மிக அதிக அளவில் சூத்திரர்களேகல்வி பயின்றார்கள் என்பதை ஆதாரங்களுடன் கூறும் "அழகிய மரம்" - என்ற நூலின் விபரங்கள் வெளியிடப்பட்டன.

இது குறித்து மதிப்பிற்குரிய தமிழாகரர் திரு.தெ.முருகசாமி ‌ஐயா அவர்கள் கூறிய கருத்துக்களுக்குக் கடந்த இரண்டு மாதங்களாய் பதிலளித்தேன்.

ஐயா அவர்களின் கடிதத்தின் கடைசி பகுதியினை இவ்விதழில் காண்போம்.

"வேதம் படிக்க அந்தணர்க்கே தகுதி" என்றதால் பிறர் படித்துவிடக்கூடாது என்பதற்காகவே எழுதி வைக்க வில்லையாம்.

இது ஒரு காலத்திய உண்மை. அந்நாளில் சமயக் கல்விதான் இருந்தது.கால மாறு பாட்டால் பிற இடத் தொடர்பால் பல கல்வி பெருக்கம் உருவானது என்பது தான் சமூக வரலாறு.

இந்த உணர்வு காலா காலமாக இருந்து வந்ததன் துளிர்ப்பில் உரைக்கப்பட்டதன் வரிதான், "கீழ்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே" - என்று புறநானூற்றில்(183)பாண்டியன்

ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்ற நாடாளும் வேந்தன்,

"கல்வி பரவலாக்கப்பட வேண்டியதன்" உண்மையை மன்னனே கூறினான் என்றால் கல்வி ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டதன் கூறு தெரிகின்றது.

இதை எதிர்த்துக் குரல் கொடுத்த சிறுபான்மையின் தொடர்ச்சியைத் தான் பிராமணரான பாரதி "வேதம் புதுமை செய்"

என்றார் என்றால் தொன்று தொட்ட வரலாற்றை மறைக்கவோ மறுக்கவோ முடியாது.

எனவே ஒரு காலத்திய உணர்வின் பதிவாகத்தான் "அழகி மரம்" வெளிப் படுத்தியாக உணரவேண்டுமேயன்றி கல்வியின் மறுமலர்ச்சி காலத்து அதுபற்றி ஞாயப்படுத்த முடியாதாம் எனலாம்.

அதாவது இப்படி இருந்தது என்றதோடு இப்படி இருக்கவேண்டும் என்றதற்கு உலகம் பயணித்துக் கொண்டே உள்ளது என்றறிவது தான் அறிவுடைச் சமூக மாகும் என்க.

- என்று கடிதத்தின் முடிவாய் ஐயா அவர்கள் எழுதி உள்ளார்கள்.

ஐயா அவர்களின் கடிதத்திற்கு எனது பதில்:-

ஐயா அவர்களின் கடித்ததில் அறியாமையே அதிகமாய் உள்ளது. போகிற போக்கில் ஐயா அவர்கள் - அந்நாளில் சமயக்கல்வி தான் இருந்தது - என்று தனது கடிதத்தில் எழுதி உள்ளார்கள். இது உண்மையை உணராமல் தான்தோன்றித்தனமாய் எதையாவது கூற வேண்டும் என்கின்ற எண்ணத்தில் வெளிப்படுத்தும் கருத்துக்களாகும்.

பண்டைய குருகுலத்தில்-

18 வகையான முதன்மைப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவைகள்-

1.வேதங்கள் மற்றும் வேதாகமங்கள்:

ரிக், யஜூர்,சாம,அதர்வண வேதங்கள்,மற்றும் அவற்றின் துல்லியமான உச்சரிப்புக்கள்(சிட்சை),

மொழி இலக்கணம்(வியாகரணம்), ஜோதிடம்(வானவியல்)

2.கணிதவியல்:

இயற்கணிதம்,வடிவியல் மற்றும் கணக்கீட்டு முறைகள்.

3.வானியல் மற்றும் அறிவியல்:

கோள்களின் இயக்கம், காலக் கணக்கீடு மற்றும் பஞ்சாங்கம்.

4.மருத்துவம்:

ஆயுர்வேத மூலிகைகள் பற்றி அறிவு, மற்றும் அடிப்படை அறுவை சிகிச்சை முறைகள்.

5.அரசியல் மற்றும் போர்கலை:

அர்த்த சாஸ்திரம்(ராஜ தந்திரம்)மற்றும் தனுர் வேதம்(வில்வித்தை, தற்காப்புக்கலைகள்)

6.தத்துவமும் ஒழுக்கமும்:

நியாயம், மீமாம்சம் போன்ற தத்துவங்கள் மற்றும் நற்பண்புகளை வளர்க்கும் கதைகள்.

7.சுயசார்பு வேலைகள்:

விவசாயம் செய்தல்,சமையல் கலை மற்றும் தச்சுவேலைகள்.

8.உடற்கல்வி மற்றும் தியானம்:

யோகாசனம்,தியானம் மற்றும் தற்காப்புக்கலைகள்

9.கலைகள்:

இசை,நடனம் மற்றும் ஓவியக் கலைகள்.

-இப்படி வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் குருகலத்தில் சொல்லித் தரப்பட்டன.

எனவே தான் வெளி நாட்டிலிருந்தும் கூட மாணவர்கள் பாரதம் நோக்கி வந்து கல்வி பயின்றார்கள். நம்ம வீட்டு பழைய பாட்டிகள் பாட்டிவைத்தியம் என்று மிகப் பெரிய சாம்ராஜ்யம் நடத்தியதற்கு பாரதம் நெடகிலும் நடத்தப்பட்டு வந்த குருகுலம் கல்வி சாலைகளே அடிப்படைக் காரணம்.

பாரதம் நெடுகிலும் ஏராளமான பல்கலைக் கழகங்கள் செயல் பட்டுக் கொண்டிருந்தன. அங்கு நான்கு வருணத் தார்களும் கல்வி பயின்றார்கள்.

இந்த உண்மைகளையெல்லாம் பிராமண காழ்ப்புணர்ச்சி காரணமாய் ஐயா அவர்கள் மறைத்துப் பேசுவது தர்மம் நியாயங்களுக்கு மாறுபட்டது.

அல்லது-

இதையல்லாம் அறியாத காரணத்தினால் தான் ஐயா அவர்களிடம் பிராமண காழ்ப்புணர்ச்சி மேலோங்கி நிற்கின்றதோ - என எண்ணத் தோன்றுகின்றது.

"தேரோட்டியின் மகன் என இழிவுபடுத்தப்பட்ட கர்ணன் - பாண்டவர்களுக்கு வில்வித்தைக் கற்றுக் கொடுத்த அதே பிராமண குரு துரோணாச் சாரியாரிடம் தான் வில்வித்தைப் பயின்றான்" என்பதை ஐயா அவர்கள் மகாபாரதத்தைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும் என ஐயா அவர்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஐயா போன்ற பகுத்தறிவுவாதிகள் வெள்ளைக்காரன் தான் முல்லைப் பெரியாறு அணை கட்டித் தந்தான் - நாடு முழுவதும் ரயில் பாதை அமைத்தான் - பாலங்கள் கட்டித் தந்தான் - அவன் தான் நமக்குக் கல்வியே கற்றுத் தந்தான் என்று கதை விடுவார்கள்.

அவர்களுக்கெல்லாம் சவால் விட்டு ஒரு கேள்வி கேட்கின்றேன் - பதில் இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம்.

பாரத்த்தின் எந்த ஊரிலாவது - எந்த கிராமத்திலாவது - அல்லது - எந்த தெருவிலாவது - ஏதாவது ஒரு பள்ளிக் கூடத்தை வெள்ளைக்காரன் கட்டியது என்று இந்த பகுத்தறிவு ஐயா அவர்களால் சுட்டிக் காட்ட முடியுமா?

சவால்.....

நாடெங்கிலும் நடந்து வந்த குருகுலம் கல்விக் கூடங்களில் தன்னுடைய பாட திட்டங்களைத் தான் நடத்த வேய்டும் என்று கட்டாயப் படுத்தி திணித்த்து தான் வெள்ளைக்காரன் செய்த ஒரே மோசடித்தனம்.

இதற்கு ஐயா அவர்கள் பதில் அளிப்பாரா?

பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் "கீழ் பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன் கண்படுமே" என்ற வரி அடங்கிய பாடலின் முழு பொருளையும் அடுத்த இதழில் காண்போம்.

அதில் ஐயா அவர்கள் திரித்துக் கூறுவது போல் கல்வி மறுக்கப் பட்டது என்பதற்கான எந்தவொரு குறிப்புமே இல்லை.

-அடுத்த இதழில்......

குருகுலத்தென்றல் ஆகஸ்டு 2026